புதுச்சேரி மாநிலத்தில் நாளை இரண்டு இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலங்கள் நடத்த புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டு, மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் மற்றும் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவு ஆகிய விழாக்களை கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றது.
இதேபோல் காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து
புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது. பின்னர் பொதுக்கூட்டமும் நடைபெறுகின்றது.
புதுச்சேரி மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.







