தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பாளையம், தாண்டாகவுண்டரில் செயல்பட்டு வரும் அரசு…

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அணைப்பாளையம், தாண்டாகவுண்டரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி கட்டடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பள்ளி கட்டடத்தை சீரமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக இந்திய மாணவர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, நாமக்கல் மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவதாக கூறினர். மேலும் திருச்செங்கோடு தண்ணீர் பந்தல் பாளையம் அரசு பள்ளி ஆசிரியை தெய்வம்மாள் என்பவர் சாதி ரீதியாக திட்டியதால், மாணவர் ரீதுன் உயிரை மாய்த்துக் கொண்டதாக தெரிவித்தனர்.

ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், அவர் மீது துறை ரீதியாகவும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதேபோல், நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்கள், ஆசிரியருக்கு ஆதரவாக ஆசிரியர்களும், அரசியல் கட்சியினரும் மாணவியின் வீட்டிற்கு சென்று மிரட்டி வருவதாக குற்றம்சாட்டினர். இதுபோல் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

 

இம்மனுக்கள் மீது முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 22-ஆம் தேதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என இந்திய மாணவர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.