தனுஷின் தமிழ் சினிமா பயணத்தில் வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு ரசிகர்களின் ஆரவாரத்துடனும், வெகுஜன மக்களின் கைத்தட்டல்களுடனும் திரையரங்குகளில் பொறி பறக்க மெகா ப்ளாக் பஸ்டர் வெற்றியை வாரிக்கொடுத்தது அசுரன் தான். இதற்கு முன்பு வடசென்னை படமும் அதற்கு பின்பு கர்ணன் படமும் குறிப்பிடத்தகுந்த வெற்றியை கொடுத்திருந்தாலும் அந்த இரண்டு படங்களைப்போல் வெகுசன மக்களின் அமோக வரவேற்பை வாரிக் குவிக்கவில்லை. அந்த வகையில் பார்த்தால் 2010 முதல் திரையரங்குகளில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் சூப்பர் டூப்பர் ஹிட்டான தனுஷின் தமிழ் படங்கள் என்றால் மூன்றுதான். அவைகள் ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, அசுரன்.
மேலும் தனுஷின் கடந்த இரு படங்களான ஜகமே தந்திரம் , மாறன் ஆகியவை OTT-யில் வெளியானதுடன் எதிர்பார்த்த அளவிற்கு போதுமான வரவேற்பும் பெறவில்லை என்று சொல்வதை விட படுமோசமான விமர்சனங்களை சந்தித்தது எனலாம்.
அநேகன் படத்தில் ‘டங்காமாரி ஊதாரி’ பாடலில் ‘ஆப்போனெண்டில் ஆளே இல்ல சோலோ ஆகிட்டேன்..’ என்று ஒரு வரி வரும். தன்னுடைய போட்டியாளாரான சிம்புவின் சினிமா வாழ்க்கை தென்றலையும் தீண்டாமல்.. தீயையும் தாண்டாமல்! அந்தோ பரிதாபமாக சென்றுகொண்டிருக்க தான் மட்டும் தனியாக ஆடிக்கொண்டிருப்பதாக தனுஷ் பாடும் வகையில் அந்த வரிகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. உண்மையில் சிம்புவின் காம்படீஷன் இல்லாததால் சிம்புவுடன் சேர்ந்து தனுஷுமே சினிமாவில் பின்னடைவை சந்தித்தாக சினிமா ஆர்வலர்கள் கூறினார்கள்.
இந்நிலையில் இருவருமே ஒரே மேடையில் ஏறி இரு தரப்பு ரசிகர்களிடமும் ‘ நாங்க வந்துட்டோம்னு சொல்லு திரும்ப வந்துட்டோம்னு சொல்லு’ என்பது போல் மாஸ் காட்டினார்கள். ‘என்னோட படம் வெளியாகளன்னாலும் தனுஷோட படங்கள் வந்துட்டே இருந்ததால என்னோட இடமும் அப்படியே இருந்துச்சி’ என்று வெளிப்படையாக உறுகினார் சிம்பு. இதனைத்தொடர்ந்து சிம்புவும் மெல்ல மெல்ல மீண்டு வந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொடுத்தார். இதன்பலனாக அவரின் மாநாடு படம் அதிரிபுதிரியான மாஸ் வெற்றியை பெற்றது.
இதனைத்தொடர்ந்து அவரின் Most favourite இயக்குநரான கவுதம் வாசுதேவுடன் அடுத்த அத்தியாயத்திற்கு தயாரானார். வெந்து தணிந்தது காடு என தலைப்பிட்டு வந்த போஸ்டரை பார்த்தே தமிழ் சினிமா தீப்பிடித்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் காட்சிகளும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புவின் வெறித்தனமான ரசிகரான கூல் சுரேஷின் சாகசத்தால் சினிமாவில் மட்டுமல்லாது கிரிக்கெட், அரசியல் என்ற எந்த துறையில் யார் மாஸ் காட்டினாலும் ‘வெந்து தணிந்தது காடு’ சம்பந்தப்பட்டவங்களுக்கு வணக்கத்த போடு என அந்த தலைப்பே ஒரு brand-ஆக மாறிப்போனது.
ஆகஸ்ட் 17ம் தேதி வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் வந்து ரசிகர்களை பதம் பார்க்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படமும் ஆகஸ்ட் 17ம் தேதியன்று திரையரங்கை அலங்கரிக்கும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷின் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர்தான் திருச்சிற்றம்பலத்தையும் இயக்குகிறார் என்பதால் இப்படத்திற்கான எதிர்ப்பார்ப்பும் அதிர்கரித்துள்ளது.
தனுஷ் – சிம்புவுக்கு இடையே rivalry தொடங்கிய காலகட்டத்தில் ட்ரீம்ஸ் (dreams) – மன்மதன் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. அந்த ரேஸில் சிம்புவே வெற்றிபெற்றார். அதன் பிறகு இவரின் பெரும்பாலான படங்கள் ஒரே மாதத்தில் அல்லது சில வாரங்களின் இடைவேளியில் வெளியாகியிருந்தாலும் ஒரே நாளில் வெளியாகவில்லை என கூறுகின்றனர் சினிமா ஆர்வலர்கள்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 17ம் தேதி தனுஷின் திருச்சிற்றம்பலம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஒரே நாளில் வந்து விருந்து வைத்தால் இருதரப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் அன்லிமிடெட் விருந்தாக அமையும் என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள்.







