சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேரம் இருப்பதை பொறுத்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேச வாய்ப்புகள் அளிக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு உறுதி தெரிவித்துள்ளார்.
16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. கூட்டம் நிறைவடைந்த பின்னர் எத்தனை நாட்கள் அவை நடைபெறும் என்பதை முடிவு செய்ய சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவை முன்னவர் துரைமுருகன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் கோ க மணி, பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு கூறியதாவது;
“நடிகர் விவேக், எழுத்தாளர் கி ராஜநாராயணன், துளசி ஐயா வாண்டையார், காளியண்ணன் கவுண்டர் ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது . ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. 22,23 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் விவாதத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் உரையாற்றுகின்றனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதில் அளித்து 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். நேரத்தைப் பொறுத்து அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
குறைவான நேரமே உள்ளதால் இந்த கூட்டத்திடரில் கேள்வி- பதில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் இடம் பெறாது. சட்டமுன் வடிவுகள் நிறைவேற்றப்படும்.”
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு கூறினார்.