கொரோனா பரவலை தடுக்க குறுகிய காலத்திலேயே பல்வேறு நடவடிக்கைகளை தனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பரமசிவன், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், எம்.என்.ராஜா, காங்கிரஸ் சார்பில் விஜயதரணி, முனிரத்தினம், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார்.
கொரோனா நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் உதவுவதற்காக கட்டளை மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கொரோனா பரவலை தடுக்க குறுகிய காலத்திலேயே பல்வேறு நடவடிக்கைகளை தனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியின்போது உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ரெம்டெசிவர் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அனைத்து கட்சிக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







