’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின்…

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் நடந்து முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : அதிமுக பொதுக்குழு செல்லும் – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; இபிஎஸ் வசமானது அதிமுக

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மதுரையை அடுத்த டி.குன்னத்தூரில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், ”உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இறுதியானது.

அதிமுக நிர்வாகிகளை கூட்டி, விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவார். அப்படி தொடங்கினால், அவர் எங்களுக்கு எதிரியா? இல்லையா? என்பது தெரிய வரும்.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக உள்ளேன். 2024ம் ஆண்டு தேர்தல் குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும். எங்களை விட்டுச் சென்ற எம்எல்ஏ-க்கள் நன்றாக இருக்கிறார்களா என்று அவர்களிடமே கேட்டுப் பாருங்கள். இனிமேல் ஒவ்வொருவராக வந்து மீண்டும் அதிமுகவில் இணைவார்கள். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுக தொண்டர்கள் எழுச்சி பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.