அதிமுகவின் ஒற்றை தலைமையான எடப்பாடி பழனிசாமி- உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பிற்கு வலுசேர்த்த வாதங்கள் என்ன?

அதிமுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது வரையிலான அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம் இன்று  அளித்த…

அதிமுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப்பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டது வரையிலான அதிரடி முடிவுகள் மேற்கொள்ளப்பட்ட ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது உச்சநீதிமன்றம் இன்று  அளித்த தீர்ப்பு. இந்த தீர்ப்பை பெறும் வகையில் இபிஎஸ் தரப்பில் எடுத்துரைக்கப்பட்ட முக்கியமான வாதங்கள் என்ன, ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டுக்கு எந்தெந்த வாதங்களை பதிலாக இபிஎஸ் தரப்பு முன் வைத்தது என்பதை பார்ப்போம்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, பொதுக்குழுகூட்டம், கட்சிவிதிகள், ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஆகிய மூன்று கோணங்களிலேயே பிரதானமாக தனது வாதங்களை ஓபிஎஸ் தரப்பு முன்வைத்தது.

ஓபிஎஸ் தரப்பு வைத்த முக்கிய வாதங்கள்

1)அதிமுக பொதுக்குழுவை ஜூலை 11ந்தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டியவிதம் கட்சிவிதிகளுக்கு முற்றிலும் முரணானது, பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து உறுப்பினர்களுக்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்படவில்லை

2)  கடந்த 2017ம் ஆண்டு அதிமுக கட்சிவிதிகளில்  கொண்டுவரப்பட்ட மாற்றத்தின்படி அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டுவரமுடியாது

3) 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ந்தேதி அதிமுக செயற்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணைப்பாளர் பதவிகள் அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த திருத்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்க்கு 5 ஆண்டுகள் வரை பதவிக்காலம் இருக்கிறது,

4) 1.5 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவை மட்டுமே எப்படி பிரதானமாக எடுத்துக்கொள்ள முடியும்

மேற்கண்ட 4 முக்கிய வாதங்களைத்தான் ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முக்கியமாக வைத்திருந்தது.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் இந்த கருத்துக்களுக்கு இபிஎஸ் தரப்பு கீழ்க்கண்டவாறு பதில் வாதங்களை எடுத்துவைத்தனர். அந்த வாதங்கள் அவர்கள் தரப்பிற்கு வலுசேர்த்தது.

பொதுக்குழு கூட்டப்பட்டது குறித்த ஓபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு இபிஎஸ் பதில்

1) ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பிலும் பங்கேற்றுள்ளனர். ஜூன் 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக செய்யப்பட்ட அறிவிப்பையும் ஓபிஎஸ் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது

2) ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூட்டப்படுவது குறித்து ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் அவைத் தலைவர் அறிவித்தபோது அது பல்வேறு ஊடகங்களிலும் நேரலை செய்யப்பட்டுள்ளது.

3) 5ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக் குழுவை கூட்டலாம்.

4) தலைமைப் பதவி காலியாக இருக்கும்போது தலைமைக் கழக நிர்வாகிகள் பொதுக்குழுவைக் கூட்ட அதிகாரம் உண்டு.

பொதுக்குழுவிற்கான அதிகாரங்கள் குறித்து ஓபிஎஸ் தரப்பின் குற்றச்சாட்டுக்கு இபிஎஸ் தரப்பு பதில் 

1) அனைத்து விவகாரங்களிலும் தொண்டர்களிடம்தான் செல்ல வேண்டும் என்றால் அது சிரமமான காரியமாக இருக்கும் என்பதால் தான் பொதுக்குழுவிற்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

2) தொண்டர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் தான் விகிதாச்சார அடிப்படையில் உறுப்பினர்கள் பொதுக்குழுவில் சேர்க்கப்படுகிறார்கள்  வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கூட அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

3) அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர்களின் பிரதிநித்துவம் தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள்.எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் எடுக்கும் முடிவை அடிப்படை உறுப்பினர்களின் முடிவாகதான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு இருக்கும் அதிகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், பொதுக்குழு எடுத்த முடிவுகளை மட்டும் கேள்விக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது.

ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்த ஓபிஎஸ் வாதத்திற்கு இபிஎஸ் தரப்பு பதில்

1) கடந்த 2021ம்  ஆண்டு டிசம்பர் 1ந்தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தேர்வு தொடர்பாக கட்சி விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தத்திற்கு ஜூன் 23ந்தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் ஒப்புதல் பெறவில்லை என்பதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன.

2)  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதுபோலத்தான் இடைக்காலப் பொதுச் செயலாளர் தேர்விலும் பின்பற்றப்பட்டது.

3) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியபோது எதிர்ப்பு தெரிவிக்காத, தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று சொல்லாத ஓபிஎஸ், தற்போது மட்டும் ஏன் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் ?

4) இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும், அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், எனவே தான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றை தலைமை என முடிவு எடுக்கப்பட்டது

5) ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல பொதுக்குழு உறுப்பினர்களால்தான்.

6)  ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றால், அதனை ரத்து செய்வதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.

7) ஜூலை 11 பொதுக்குழுவில் பங்கேற்ற 2460 உறுப்பினர்கள்  இடைக்கால பொதுச்செயலாளராக ஒருமனதாக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தனர். இது மொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 94.5% ஆதரவு ஆகும்.

8) அ.தி.மு.க.வில் இல்லாத ஒரு விஷயத்தை புதிதாக கொண்டு வரவில்லை, மாறாக  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளை ரத்து செய்துவிட்டு முன்னர் இருந்தது போன்று பொதுச்செயலாளர் பதவி தான் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

இப்படி முக்கியமான பல்வேறு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு எடுத்துவைத்தது. இந்நிலையில் ஜூலை 11ந்தேதி பொதுக் குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு கடந்த செப்டம்பர் 2ந்தேதி அளித்த தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவில் தொடங்கி இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட நீக்கங்களும், நியமனங்களும் செல்லுபடியாகியுள்ளன.

-எஸ்.இலட்சுமணன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.