ஈரோடு இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி உயர் நீதிமன்றத்தில் மனு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாம் தமிழர்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாக நடத்தக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியினர் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திமுகவினரும் அதே பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்த போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், நாம் தமிழர் கட்சியினர் 12 பேர், திமுகவினர் 4 பேர், 3 காவல் துறையினர் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.

இப்பிரச்னை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சங்கர், சேவியர் பெலிக்ஸ் ஆகியோர் பொறுப்பு நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வில் உயர் நீதிமன்றத்தில் இன்று முறையிட்டனர். அதில், நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தாக்குதல் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவினர் தங்களைப் பிரசாரம் செய்ய அனுமதிப்பதில்லை. தேர்தலை நியாயமாக நடத்த உத்தரவிட வேண்டும் என முறையிட்டனர்.

அதே போல, தொகுதியில் பணப்பட்டுவாடா தாராளமாக நடைபெறுவதாக சுயேட்சை வேட்பாளர் கண்ணன் தரப்பிலும் முறையீடு செய்யப்பட்டது. இரு முறையீடுகளையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக மனுவாக தாக்கல் செய்யும்பட்சத்தில்  நாளை விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.