ஹோலி கொண்டாட்டத்தை முன்னிட்டு தார்பாய் கொண்டு மூடப்பட்ட அலிகார் மசூதி

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள மசூதி ஒன்று வண்ணம் பூசப்படாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில்…

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள மசூதி ஒன்று வண்ணம் பூசப்படாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ‘ஹோலி’.  இந்த பண்டிகை நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்களிலும், பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலை மோத துவங்கியுள்ளது. தீய சக்திகளை நல்லவை வெற்றி பெற்றதின் மகிழ்ச்சி கொண்டாட்ட நாளான ‘ஹோலி’ பண்டிகையின் சிறப்பே, வயது வித்தியாசம் இன்றி அனைவரும் தெருக்களில் இறங்கி ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுதான்.

இருப்பினும் இத்தகைய கொண்டாட்டங்களின் போது பிற மதத்தவர் எந்த வகையிலும் பாதிப்படைந்து விட கூடாது என பல மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தின் அலிகாரில் உள்ள மசூதி ஹோலி கொண்டாட்டத்தின் போது வண்ணம் பூசப்படாமல் இருக்க,
அதனை உறுதி செய்வதற்காக நேற்று தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இது குறித்து மசூதியின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹாஜி முகமது இக்பால் கூறுகையில் “நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில், மசூதியில் யாரும் வண்ணம் அல்லது அழுக்கை வீசக் கூடாது என்பதற்காக மசூதியை தார்ப்பாய் கொண்டு மூடுகிறோம்.

மேலும் அமைதி மற்றும் ஒழுங்கைப் பேணவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம் ”
என கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாகவே, உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு வந்ததில் இருந்தே சுமார் 6, 7 ஆண்டுகளாக ஹோலி பண்டிகை நேரங்களில், பதற்றமான பகுதியில் உள்ள மசூதிகள் எந்த அத்துமீறல்களிலும் சிக்கி விட கூடாது என்பதற்காக, இப்படி தான் தார்பாய் கொண்டு மூடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.