ஆலங்குளம்: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஆலங்குளத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக காய்ச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும்…

ஆலங்குளத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக காய்ச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன்படி, காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் மஸ்தூர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். மருந்து தெளித்தல், கொசு அழிக்கும் புகை அடித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, நிலவேம்பு கசாயம் வழங்குதல், காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளில் துப்புரவு பணி மற்றும் நடமாடும் மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தும் தண்ணீரை நன்றாக கொசு புகாதவாறு மூடி வைக்கவும், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கக் கூடிய பொருள்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு வரும் மஸ்தூர் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடவும், காய்ச்சல் கண்டால் உடன் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளவும் என்றனர்.

– மாரி தங்கம், மாணவ ஊடகவியலாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.