அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு பெற்றது உண்மை என மதுரை கோட்டாட்சியரின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் முதல்பரிசு பெற்ற கண்ணன் மோசடி செய்து, கார் பரிசு பெற்றதாக இரண்டாமிடம் பிடித்த அரிட்டாப்பட்டியை சேர்ந்த கருப்பண்ணன் என்பவர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மேலும், உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கும் தொடர்ந்தார்.
கருப்பண்ணனின் புகார் தொடர்பாக, கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதில், ஹரிகிருஷ்ணன் என்கிற மாடுபிடி வீரரின் பதிவில் கண்ணன் ஆள்மாறாட்டம் செய்து விளையாடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹரிகிருஷ்ணன் மற்றும் கண்ணன் இருவரும் ஆள் மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்கள் என்றும், ஆவணங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில், ஆள் மாறாட்டம் உறுதியாகி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







