தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம்!

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒரு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி ஆகும். அரசு கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்…

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஒரு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி ஆகும். அரசு கார் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இவருக்கு அளிக்கப்படும். டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வருபவர் டெல்லியில் தமிழக அரசின் பிரதிநிதியாகத் தமிழ்நாட்டிற்கும், மத்திய அரசுக்கும் ஒரு பாலமாக இயங்கும் பொறுப்பு மிக்கவர். தமிழக அரசால் மேற்கொள்ளப்படும் மத்திய அரசு சார்ந்த விவகாரங்களைக் கண்காணிக்கும் அதிகாரம் உள்ளவர்.

இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏகேஎஸ் விஜயனை மீண்டும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் கடந்த 2021-ல் பொறுப்பேற்றார். ஓராண்டு காலம் மட்டுமே பதவிக்காலம் கொண்ட டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியில் 2022 இல் மீண்டும் நியமிக்கப்பட்டார் ஏ.கே.எஸ்.விஜயன்.

இந்நிலையில் ஜூன் 15-ஆம் தேதியுடன் ஏ.கே.எஸ்.விஜயனின் பதிவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனை ஒட்டி தற்போது மீண்டும் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ் விஜயன் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்றவர். 2014ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். கடந்த முறை நாகப்பட்டினம் தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.