நீட் தேர்வு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழு தாக்கல் செய்த அறிக்கையை, மக்கள் நல்வாழ்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்கலாம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்வதற்காக, தனிச்சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02 சதவீதத்தில் இருந்து 69.53 சதவீதமாக உயர்ந்ததுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44 சதவிகிதத்தில் இருந்து 1.7 சதவிகிதம் ஆக குறைந்துள்ளதாகவும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது எனவும், இன்னும் சில ஆண்டுகள் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையின் தரம் கேள்விக்குறியதாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து செய்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.







