நடிகர் அஜித்தை சந்தித்து அவரின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ) அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்த நடிகர் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் மிர்ச்சி சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் திரைத்துறையினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய்யும் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். இதையடுத்து சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு அஜித் தந்தையின் உடலை ஊர்வலமாக எடுத்துச்சென்று , அங்கு அவருக்கு இறுதிசடங்குகள் செய்யப்பட்டு, மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் அஜித்தின் தந்தை இறந்த அன்று நடிகர்கள் சூர்யாவும், கார்த்தியும் சென்னையில் இல்லாத நிலையில், இன்று சென்னை திரும்பிய இருவரும், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவருக்கு ஆறுதல் கூறினர்.
https://twitter.com/Karthi_AIFC/status/1640230116457582603?s=20
- பி.ஜேம்ஸ் லிசா









