29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

விமர்சனம்: எப்படி இருக்கிறது வலிமை?

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையில் வேலை கிடைக்காமல் திண்டாடும் எஞ்சினீயரிங் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்து டார்க் நெட் மூலமாக ஒருங்கிணைத்து போதை மருந்து விற்பனை, கொலை, செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றுகிறது ஒரு கும்பல். மதுரையிலிருந்து சென்னை மாற்றலாகும் காவல் அதிகாரி அஜித், உயிரிழப்பு வழக்கை விசாரிக்கச் செல்லும்போது இதனை கண்டுபிடிக்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் மொத்த பொறுப்பும் அஜித்திடமே ஒப்படைக்கப்படுகிறது. அஜித்துக்கும், போதை மருந்து கும்பலுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் முழுக்கதையும்.

நேர்மையான அதே சமயம் இரக்க குணம் கொண்ட போலீஸ் அதிகாரியாக வருகிறார் அஜித். அம்மா, சகோதரர்கள் மீது அதீத பாசம் கொண்டவராக, அவர்களுக்காக திருமணமே செய்துகொள்ளாமல் நெகிழ வைக்கிறார். நடனம், பைக் சாகசம், ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லனை பிடிக்க அஜித் மேற்கொள்ளும் பைக் சாகச சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் தரம்.

படத்தின் கதாநாயகியான ஹூமா குரோஷிக்கு அஜித்துடன் வருவதைத் தவிர நடிப்பில் சோபிக்கும்படியாக எதுவுமில்லை. கடைசி வரை அஜித்தை அவர் காதலிக்கிறாரா, இல்லையா என்பது அவருக்குக் கூட தெரியாது போல. வில்லனாக வரும் கார்த்திகேயா அறிமுக நடிப்பில் அசத்தியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வரும் ஜிஎம் சுந்தர், பாவெல் நவகீதன் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்துள்ளனர். பொல்லாதவன் போலவே வலிமையிலும் பைக் முக்கிய பங்கு வகிக்கிறது. பின்னணி இசையில் மிரட்டியுள்ளார் யுவன். நாங்க வேற மாரி பாடல் ரசிக்க வைக்கிறது.

இருந்தாலும் அம்மா செண்டிமெண்ட் என வரும் சில காட்சிகள் நம்மை சோதிக்கின்றன. 80 களின் ரஜினி, கமல் காலம் தொடங்கி இப்போது வரை நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அதே போதை மருந்து கும்பல் கடத்தல் கதையை டார்க் நெட், சைபர் க்ரைம் என்ற திரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹெச்.வினோத். என்ன பழைய படங்களில் விஜயகுமார், சத்தியராஜ் போன்றோர் வில்லன்களாக இருப்பர். தற்போது வில்லன்கள் மாறியுள்ளனரே தவிர கதை என்னவோ அதே கதைதான். பாட்சா படம் தொடங்கி, கடைசி நேரத்தில் குடும்பத்தினரை நாயகன் காப்பாற்றும் காட்சிகளை எத்தனை படங்களில்தான் நாம் காண்பது.

படம் முழுக்க பைக் வருகிறது, பைக் வருகிறது, பைக் வந்துகொண்டே இருக்கிறது என்ற அளவுக்கு பைக் ரேஸ் சேசிங் காட்சிகளால் நிறைந்திருக்கிறது. படத்தின் பெயராக வைத்துவிட்டோமே என்பதற்காக வலிமை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறதே தவிர, படத்திற்கும் தலைப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம்.

என்சினீயரிங் படித்தால் வேலை கிடைக்காது என்ற பிம்பத்தை திரைப்படங்கள் அழுத்தமாக கூறிக்கொண்டே உள்ளன. அதற்கு வலிமையும் விதிவிலக்கல்ல. எதற்கெடுத்தாலும் எஞ்சினீயரிங் படித்தவர்களையே ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள் என அவர்கள் சண்டைக்கு வந்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.  அதேபோல தமிழ் சினிமா மொத்தமும் மதுரையை குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ரஜினி தொடங்கி விஷால் வரை கதாநாயகர்கள் மதுரையிலிருந்து மட்டும்தான் அறிமுகமாக வேண்டுமா என்ன? திருச்சியிலிருந்தோ திண்டுக்கல்லில் இருந்தோ அறிமுகமாகக் கூடாதா?

மொத்தத்தில் இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இத்திரைப்படம் விருந்தாக அமைந்துள்ளது. மற்ற சினிமா ரசிகர்களுக்கு, வழக்கமான ஹீரோயிசம் நிறைந்த படமாகவே உள்ளது. விஜய்க்கு எப்படி மாஸ்டரோ அதேபோல அஜித்துக்கு வலிமை.

– த.எழிலரசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading