பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடிகர் அஜீத்தின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழகம் முழுவதும் 900 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்,சென்னையில் உள்ள ரோகிணி மற்றும் காசி திரையரங்குகளின் முன் அதிகாலை முதலே குவிந்த ஆயிரக்கனக்கான ரசிகர்கள் நடனமாடி ஆரவாரம் செய்து கோலாகலமாக கொண்டாடினர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜீத்தின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடினர். அதிகாலை முதலே திரையரங்கில் குவிந்த ரசிகர்கள் மேளதாளத்துடன் நடனம் ஆடி உற்சாகமாக வலிமை திரைப்படத்தினை வரவேற்றனர்.
மதுரை மாவட்டத்தில் 20 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. காளவாசலில் உள்ள சண்முகா திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜீத்தின் பேனருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து ஆரவாரம் செய்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்த நிலையில், அவர்கள் திரையரங்கில் உள்ள தடுப்புகளை தள்ளிவிட்டும், நுழைவுவாயிலில் உள்ள கண்ணாடி கதவுகளையும் உடைத்துக் கொண்டு சென்றதில்,சிலருக்கு காயம் ஏற்பட்டது.