ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர், பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தில் உள்ளதாக ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசரம் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஐநா சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நிலவும் சூழ்நிலை பெரும் நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தில் உள்ளதாக கூறினார்.
இருநாடுகளுக்கு இடையேயான பிரச்னையை கவனமாக கையாளாவிட்டால், அமைதி மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படும் என அவர் கவலை தெரிவித்தார். மேலும், இருதரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடித்து அமைதியையும் பாதுகாப்பையும் பேண வேண்டும் என வலியுறுத்திய அவர், சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுமூக தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
அண்மைச் செய்தி: ரஷ்யாவின் 7 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் தகவல்
இந்நிலையில், உக்ரைனில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








