ஏர்பஸ் நிறுவனத்தின் ‘சி-295’ ரக போக்குவரத்து விமானத்தின் முதல் விமானம் இந்த மாத இறுதிக்குள் இந்திய விமானப் படைக்கு வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் ரெமி மெய்லார்டு தெரிவித்துள்ளார்.
ஏர்பஸ் நிறுவனத்தில் சி-295 ரக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விமானம் 10 டன்கள் வரை சுமையை தாங்கிச் செல்லும் திறன்கொண்டது. இந்த விமானம் 71 வீரர்கள் அல்லது 50 பாராசூட் படைப்பிரிவு வீரர்களைச் சுமந்து செல்லும். மேலும், குறுகிய அல்லது ஆயத்தமில்லாத ஓடுதளங்களிலும் இந்த விமானத்தை மேலெழும்பச் செய்யவும், இறக்கவும் தகுதி வாய்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது விமானப்படையில் உள்ள கனரக விமானங்கள் அணுக முடியாத இடங்களில் தளவாட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த சி-295 ரக விமானங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில், பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டுக்காக 56 சி-295 ரக போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்கு ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தத்தில் ஈடுபட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் 16 விமானங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்படும். இந்தியாவின் வதோதராவில் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் அமைக்கும் தொழிற்சாலையில் மற்ற 40 விமானங்கள் உருவாக்கப்படும். அந்த வகையில் ஸ்பெயின் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் சி-295 விமானம் இந்திய விமானப் படைக்கு இந்த மாதத்துக்குள் வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தினார்.விமானத் துறையில் பொறியாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கு மத்திய அரசின் கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகம் மற்றும் ஏர்பஸ் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் நேற்று கையொப்பமானது.
இதையடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஏர்பஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ரெமி மெய்லார்டு கூறுகையில், ‘முதல் சி-295 விமானத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இந்திய விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி ஸ்பெயினில் உள்ள செவில் நகருக்கு விரைவில் செல்ல இருக்கிறார். வரும் 2026-ம் ஆண்டு முதல், இந்தியாவில் விமானத் தயாரிப்பு தொடங்கப்படும்’ இவ்வாறு தெரிவித்தார்.