ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார்.
பிரான்ஸை சேர்ந்த ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். உலகிலேயே விமான போக்குவரத்து துறையின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி, 40 ஏ350, 210 ஏ320 என்ற இரண்டு வகையான விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா வாங்க இருக்கிறது. இந்த விமானத்தின் என்ஜின் மற்றும் விங்க்ஸ் இங்கிலாந்தில் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ”டெர்பி முதல் வேல்ஸ் வரை திறன் மிக்க மற்றும் அதிக ஊதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இதன்மூலம் இங்கிலாந்து பொருளாதாரம் வளரும்” என்று தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இதுதொடர்பாக இங்கிலாந்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. இதன்மூலம் பிரிட்டனின் ஏற்றுமதி அதிகரிக்க உதவியாக இருக்கும். புதிய விமானத்தில் குறிப்பிடத்தக்க தயாரிப்பு பணிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 450 வேலைவாய்ப்புகள் மேல் உருவாகும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.







