டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டி இருந்தது.
இதனிடையே இன்று காலை டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியில் அமைந்துள்ள பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், ஊழியர்களின் செல்போன்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை நடத்தினர். பிபிசி சம்பந்தப்பட்ட சர்வதேச வரிஏய்ப்பு மற்றும் பண பரிமாற்ற முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அண்மைச் செய்தி: மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
இந்நிலையில் பிபிசி அலுவலகத்தில் சோதனை நடத்தியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ”பாஜக தலைமையிலான மத்திய அரசின் கீழ் இந்த நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரத்தை இழந்துள்ளன. அரசியல் எதிரிகளை குறிவைக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற அரசியல் கருவிகள் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஜனநாயகத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் அழித்ததற்கு காரணமானவர்களை இந்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். வரவிருக்கும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.







