மதுரை எய்ம்ஸ் என்ன ஆனது? – மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளி

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர்,…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து  மக்களவையில் திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்குப் பின்னர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த  முழு நிதியாண்டுக்கான கடைசி பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.  பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 90 நிமிடங்கள் வாசித்தார். இந்த  நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள்  அப்போதே போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்று வருகின்றன.  மக்களவையில் தமிழ்நாடு திட்டங்கள் தொடர்பான பிரச்னைகளை தமிழக எம்பிக்கள் கிளப்பினர். இந்தியாவில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் போதிய உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வருகின்றன?. பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  கட்டுமானப் பணிகள் ஏன் தொடங்கப்படாமல் உள்ளது?. இதேபோன்று எத்தனை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன? என அடுக்கடுக்காக திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ”  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கியுள்ளது . பொய்யான தகவல்களை தமிழ்நாடு எம்பிக்கள் பரப்புகின்றனர். இந்த விவகாரத்தை தேவையில்லாமல் அரசியல் ஆக்குகின்றனர்” என தமிழ்நாடு எம்பிக்கள் மீது  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குற்றச்சாட்டினார்.

மேலும், இந்தியாவில் எந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் உட்கட்டமைப்பு இல்லாமல் செயல்படவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடியவில்லை என்றாலும் வகுப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத்தை கண்டித்து திமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.