கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரைப்பட கதாநாயகிகளை கொண்டாடும் இந்தக்கால கட்டத்தில், ஒரு கதாநாயகி சொந்த மாநிலத்தில் இருந்தே விரட்டியடிக்கப்பட்ட கதை இது.
பி.கே.ரோசி – முதல் மலையாள மவுன மொழித் திரைப்படத்தின் கதாநாயகி. மலேசியாவை சேர்ந்த லாரன்ஸ் என்பவர் புகைப்படக்கலை குறித்து கற்றுத்தந்த அனுபவத்தின் அடிப்படையில் முதன் முதலாக டேனியல் என்பவர் மலையாள திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார். அதிநவீன கேமரா உள்ளிட்டவை கிடையாது என்பதால் கேமரா படம் பிடிக்கும் தூரத்துக்குள் நடிகர், நடிகைகளை நிற்கவைத்து திரைப்படத்தை இயக்கினார் டேனியல்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1928 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியான விகத குமாரன் – காணாமல் போன மகன் எனப் பொருள்படும் தலைப்புடன் கூடிய திரைப்படம் திருவனந்தபுரம் அருகில் உள்ள ஒரு டென்ட் கொட்டகையில் திரையிடப்பட்டது. டென்ட் கொட்டகையில் மணல் நிரப்பப்பட்டு திரைப்படத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர் உயர்ஜாதி மக்கள். திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ரோஸி கதாநாயகி நடித்திருந்தார்.
மௌன திரைப்படம் என்றாலும் திரையில் தோன்றிய காட்சிகளும் பொம்மைகளாக வந்த கதாபாத்திரங்களும் மலையாள மக்களை வியக்க வைத்தன. திரைப்படத்தின் ஒரு காட்சியில், கதாநாயகியான ரோஸி நடந்து வர, சைக்கிளில் வந்த இளைஞர், ரோஸி தலையில் சூடி இருந்த மலரில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்க்கிறான்.
அவ்வளவுதான் டென்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த மேல் தட்டு மக்கள் ஆவேசம் கொண்டனர். தங்கள் குலத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதா என வெகுண்டெழுந்து, டென்ட் கொட்டகையை அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்தினர். இருந்த சொத்து உள்ளிட்ட அனைத்தையும் இழந்து திரைப்படத்தை தயாரித்த டேனியல் உயிருக்கு பயந்து ஓடினார். உயிர் தப்பிய சில மணி நேரங்களில் கதாநாயகியாக நடித்த தாழ்த்தப்பட்ட குளத்தைச் சேர்ந்த ரோஸி எங்கு இருக்கிறார் என விசாரித்து தீப்பந்தங்களுடன், தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓடி வந்த ஒரு கும்பல், ரோஸியின் குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். ஆனால் முன்னதாகவே டேனியல் எச்சரித்ததால் குடிசையை விட்டு ரோஸியும் குடும்பத்தினரும் தப்பி ஓடினர்.
பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய வசனத்தை போல ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினாள் என்பதற்கேற்ப சாலைக்கு வந்த ரோஸி அவ்வழியே வந்த லாரியை மறித்து தனது உயிரை காக்க டிரைவரிடம் உதவி கோரினார். லாரி டிரைவர் ஆன கேசவ பிள்ளை இரக்கம் கொண்டு ரோஸியையும் அவரது குடும்பத்தினரையும் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். (நாகர்கோவிலுக்கு வந்த பின்னர் தன் உயிர் காத்த கேசவ பிள்ளையையே மணந்து கொண்டார்). கேரள திரையுலகில் முதல் திரைப்பட கதாநாயகி ரோஸி, ராஜம்மாவாக என்ற பெயருடன் முழு தமிழ்ப்பெண்ணாக நாகர்கோவிலில் வாழ்ந்து மறைந்தார். ரோஸியின் 120-வது பிறந்த நாள் இன்று.
ரோஸியின் கதை இப்படி இருக்க, விகதகுமாரன் திரைப்படத்தின் இயக்குநரான டேனியல் ஊரை விட்டு தப்பித்து வந்து கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் தஞ்சம் புகுந்தார். பின்னர் பல் மருத்துவம் படித்து அப்பகுதியில் மருத்துவராக பணியாற்றினார். தனது வீடு, நிலம், தோட்டம் என அத்தனை சொத்துகளை விற்று கடன்களை அடைத்து மறைந்தார். காணாமல் போன மகன் என திரைப்படம் தயாரித்த டேனியல், ஆவணப்படமாக அனைவரிடமும் வாழ்கிறார்.
மலையாள மவுன மொழித் திரைப்படத்தின் முதல் கதாநாயகியான பி.கே.ரோசியை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் (சேர்ச் என்ஜின்) தனது முகப்பு பக்கத்தில் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது.