மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஷானெல் இரானியின் திருமணம் ராஜஸ்தானில் நேற்று நடைபெற்றது.
ஸ்மிருதி இரானியின் மூத்த மகள் ஷானெல் இரானியை வழக்கறிஞர் அர்ஜூன் பல்லா நேற்று கரம் பிடித்தார். இவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள கிம்சார் கோட்டையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் 2021 ஆம் ஆண்டே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஹல்தி, மெஹந்தி, சங்கீத் உள்ளிட்ட திருமண கொண்டாட்டம் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.
ஷானெல் இரானி மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். மேலும், வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் சட்ட மேற்படிப்பை முடித்தவர். அர்ஜூன் பல்லா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தாத்தாவும், பாட்டியும் இந்தியர்கள். பெற்றோர் சுனில் பல்லா, ஷபினா பல்லா. இவருக்கு தம்பி ஒருவரும் இருக்கிறார். குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றனர். அர்ஜூன் பல்லா லண்டன் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். தற்போது கனடாவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.
ஷானெல்லா சிவப்பு நிற லெஹங்கா உடையிலும், அர்ஜூன் பல்லா வெள்ளை நிற சர்வானியிலும் ஜொலித்தனர். அதே போல, ஸ்மிருதி இரானி சிவப்பு மற்றும் கோல்டன் நிற புடவை அணிந்திருந்தார். திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஷானெல் இரானி மற்றும் அர்ஜூன் பல்லா புகைப்படங்களும், ஸ்மிருதி இரானியின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
திருமண விழாவில் பங்கேற்க நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். திருமண நிகழ்ச்சி நடைபெறும் கிம்ஷார் கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-ம.பவித்ரா









