ஜெயலலிதாவின் கனவு நனவாக அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என வைத்திலிங்கம் இல்லத் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான வைத்திலிங்கத்தின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று, வைத்திலிங்கம், அவர்கள் இருவரின் வீடுகளுக்கே தேடித் சென்று நேரில் அழைப்பிதல் கொடுத்து, அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் சில உடல்நலக்குறைவு பிரச்சனைகளால் சசிகலா இந்த திருமண விழாவில் கலந்துகொள்ளாத நிலையில், டிடிவி தினகரன், ஓ.பி.எஸ். ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து திருமண நிகழ்ச்சியில், மேடை ஏறி வைத்திலிங்கத்தின் இளைய மகன் சண்முகப்பிரபுவிற்கு டிடிவி தினகரனுடன் இணைந்து பூங்கொத்து கொடுத்து மணமக்களை வாழ்த்திய ஓபிஎஸ், பின்னர் அங்கிருந்தவர்களிடம் உரையாற்றினார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது ;
தொண்டர்கள் தான் அதிமுகவின் ஆணிவேர். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் எண்ணமாக உள்ளது. அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை என்பதை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா. அதற்காகத்தான் நமது அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்ய வேண்டும் என்று அதற்கான பிள்ளையார் சுழி இன்று போடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இடையே ஏற்படும் மனஸ்தாபம் தான் எனக்கும் டிடிவி தினகரனுக்கு இடையே இருந்தது. தற்போது அவற்றையெல்லாம் மறந்து மீண்டும் ஒன்றிணைந்துள்ளோம். எங்களின் அழைப்பை ஏற்று வைத்திலிங்கம் இல்ல திருமண நிகழ்ச்சியில் டிடிவி கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.
பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன சசிகலா-ஓபிஎஸ் சந்திப்பு இந்த திருமண விழா மூலமாக நிறைவேறும், அதுமட்டுமின்றி சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ஒரே மேடையில் ஏற்றி தங்கள் பலத்தை காண்பிக்க வேண்டும் என்று வைத்திலிங்கம் நினைத்திருந்த நிலையில், சசிகலா இந்த திருமணத்தில் கலந்து கொள்ளாதது வைத்திலிங்கம் தரப்பில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருப்பது இரு தரப்பினருக்கிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது .
- பி.ஜேம்ஸ் லிசா









