வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும், இத்தகைய ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் மின் வாரிய பொறியியல் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
மின்சார பயன்பாட்டு அளவை மிக எளிதாகவும் துல்லியமாகவும் கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மறு சீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தின் கீழ் மானியம் வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியுடன் தியாகராய நகரில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்
பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வர மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் வெளியிடப்பட்டு 3 கட்டமாக பொருத்தும் திட்டம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நடைமுறைகள் முடிந்து வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் மற்றும் குடிசை வீடுகள் தவிர்த்து மற்ற 3 கோடியே 30 லட்சம் மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் பயன்பாடுகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பாரதிய எலக்ட்ரிசிட்டி இன்ஜினியரிங் அசோசியேசன் மாநில பொதுச் செயலாளர் நடராஜன், நமது நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசின் Revamped Distribution Sectors Scheme மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு ஆகும் செலவு என்பது ரூ 6,900 என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் மத்திய அரசு அளிக்கும் நிதியில் ஒரு மீட்டருக்கு கிட்டத்தட்ட ரூ1,300 வரை கிடைக்கும் பட்சத்தில், மீதமுள்ள தேவைக்கு மின்சார வாரியமே அதனை ஏற்றுக் கொள்கிறது. இதனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் மீட்டர் ஒவ்வொரு நொடியும் பயனாளர் எவ்வளவு மின்சாரம் செலவு செய்கிறார்கள் என்பதை கணக்கிடுவதோடு, அதை பயனாளர்களே பார்த்துக் கொண்டு அதற்கேற்ப மின் பயன்பாட்டு அளவை கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் உதவுகிறது.
அதேபோல, மின்சார வாரியமும் எந்த பகுதிகளில் எந்த நேரத்தில் மின் தேவை பயன்பாடு அதிகம் உள்ளது என்று தெரிந்து கொள்ளவும், எதிர்கால தேவைகளுக்கு கணக்கீடு செய்யவும் இந்த முறை பெரிதும் உதவுகிறது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் மிக துல்லியமாக மின் பயன்பாட்டு அளவை கணக்கிடுவதோடு, அதற்கான கட்டண விவரத்தை நேரடியாக நுகர்வோரின் தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவலாக அனுப்ப மென்பொருள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, நுகர்வோர் அன்றாட பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் ஆப் ஒன்றையும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. முன்னர் போலவே மின் கட்டணம் தெரிவித்த பின்னர் ஏற்கனவே உள்ள கால அளவு படி 20 நாட்களில் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதற்குள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு தானாக துண்டிக்கப்படும், பிறகு மின் கட்டணம் செலுத்திய உடனே மீண்டும் மின் இணைப்பு உடனே செய்யப்படும். அது மட்டுமின்றி ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால் ஏற்கனவே மின் கணக்கீட்டாளர்களாக உள்ள ஊழியர்களுக்கு பணி இழப்பு ஏற்படாது, மாற்றத்திற்கு ஏற்றார் போல் மின்சார துறையில் காலியாக உள்ள வேறு பணியிடகளுக்கு அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அவர் கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா









