பொங்கலுக்குள் இலவச வேட்டி-சேலைகளை வழங்காவிட்டால், அதிமுக மாபெரும் போராட்டத்தை கையில் எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கலுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளை களைந்து குறித்த காலத்தில் வழங்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் தை பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி – சேலை நெய்யும் பணி முடங்கி உள்ளதாக புகார் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவு அக்டோபர் மாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்க வேண்டிய நூல் நவம்பர் கடைசியில் வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துணி நெய்வதற்கு உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொங்கலுக்குள் இலவச வேட்டி-சேலைகளை வழங்காவிட்டால், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி அதிமுக மாபெரும் போராட்டத்தை கையில் எடுக்கும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.







