தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுக தான் காரணம் என நெல்லையில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வு கேட்டு 1999ம் ஆண்டு நடைபெற்ற பேரணியில் நடந்த தடியடி சம்பவத்தில் தாமிரபரணி நதியில் விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் தாமிரபரணி நதியில் மலர் வளையம் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, தாமிரபரணி நதியில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நினைவு தூண் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்கட்டண உயர்வுக்கு அதிமுக தான் காரணம். எடப்பாடி பழனிச்சாமி உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டு திட்டத்தில் இணைந்ததால் தான் மின் கட்டணம் உயர்வு ஏற்பட்டது. மின் கட்டண உயர்வு, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பெரிய சிக்கலில் பொதுமக்கள் உள்ளனர்.
இதனை தாங்கி கொள்ளும் மன நிலையில் மக்கள் இல்லை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உதய் மின் திட்டத்தில் கையொப்பமிட மறுத்து அந்தத் திட்டத்தை நிராகரித்தார். உதய் மின் திட்டத்தில் கையொப்பமிட்டால் மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் மாநில உரிமைகள் பறிபோனதற்கு கடந்த அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி தான் காரணம் என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விகாரத்தில் யாரும் அரசியல் செய்யக்கூடாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த சம்பவத்தில் உண்மையை வெளியே கொண்டு வர வேண்டும். கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது கூட தமிழக முதலமைச்சர் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை மேற்கொண்டார். காவல்துறை இந்த சம்பவத்தில் அடி வாங்கிக் கொண்டு கலவரக்காரர்களை கலைத்துள்ளது பாராட்டுக்குரியது.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும். எப்படிப்பட்ட சக்தி வாய்ந்த நபர்களாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் நீதியை நிலை நிறுத்துவார் என தெரிவித்தார்








