இபிஎஸ் தலைமையில் அதிமுக! – கட்சித் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில்…

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜூலை 11ம் தேதி இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமாகி உள்ளது.

தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு தொண்டர்கள் பாலாபிஷேகம் செய்தனர். அதே போல் எடப்பாடி பழனிசாமியின் கட்அவுட்டுகளுக்கும் பாலாபிஷேகம் செய்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்கள் : ’ஓபிஎஸ்-ன் அனைத்து முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது’ – உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இபிஎஸ் பேட்டி

இபிஎஸ் தலைமையிலான அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, விழுப்புரத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் சூழ்ச்சிக்கு உச்சநீதிமன்றம் தக்க தீர்ப்பு வழங்கியதாக கோஷங்களை எழுப்பினர்.

இபிஎஸ்-க்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில், அதிமுகவினர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக
சென்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அதே பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஏராளமான அதிமுக தொண்டர்கள், முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கொண்டாடினர். அதேபோல், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே, அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும், ’வருங்கால தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என முழக்கமிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.