கட்சியினர் மீதான வழக்குகளை எதிர்கொள்ள சட்ட ஆலோசனைக் குழுவை அமைத்துள்ளது அதிமுக.
போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடந்தது. இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் பலர் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்கு புனையப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது” என்று தெரிவித்துள்ளது. திமுகவினரின் தூண்டுதலால் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள கழக சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், சி.வி.சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபு முருகவேல் ஆகியோரும் உறுப்பினர்களாக நியமித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த குழுவானது சட்ட உதவிகளை செய்யும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







