நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை நூலக சங்க நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா, தியாகராயநகரில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நூலகர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரையில் அமையவுள்ள நூலகம் உள்ளிட்டவை எப்படி செயல்பட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அனைத்து மாவட்டங்களிலுள்ள நூலகங்களின் நிலை குறித்தும், அங்குள்ள புத்தகங்கள் பாதுகாப்பு குறித்தும் கேட்கப்பட்டு வருவதாக கூறினார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், 50 சதவீத மாணவர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும், நீட் தேர்வில் விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.








