அதிமுக தன் பக்கம்தான் உள்ளது என்பது நிஜம் என்றும், அது மாயத் தோற்றம் அல்ல என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர் , மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அன்பின் உருவம், இரக்கத்தின் வடிவம் இயேசு பிரான். அவர் அவதரித்த நாளே கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இயேசுவின் அருள்சுரக்கும் காந்த கண்கள், புது உலகம் பிறக்க அடிப்படையாயிற்று. தவறு செய்பவர்களை மன்னிக்கும் குணம் கொண்டவர். தன்னை சிலுவையில் அறைந்தவரையும் மன்னிக்கும் குணம் கொண்டவர் இயேசு பிரான். அன்பு தான் மேலானது என்று எடுத்துக் காட்டியவர் இயேசு.
இயேசுவின் கருணை எப்படிப்பட்டது என்பதை அறிய முடிகிறது. மதத்தை விட அன்பு பெரியது. நாமும் அவ்வாறு ஒற்றுமையாக இருந்தால் வெளியே இருந்து எந்த புயல் காற்றும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. சுயநலத்துடன் வாழும் வாழ்க்கை ஆரம்பத்தில் இனிக்கும். பிறகு கசக்கும். அதை தான் இயேசு போதிக்கிறார். அவரது போதனையான அன்பு, சமாதானம், சகோதரத்துவம், சேவை மனப்பான்மை, தியானம், கருணை போன்றவற்றை பின்பற்றுவோம். ஒற்றுமை ஓங்கட்டும்” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தன் பக்கம்தான் உள்ளது என்பது நிஜம் என்றும், அது மாயத் தோற்றம் அல்ல என்றும் தெரிவித்தார். மேலும், கூடிய விரைவில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்படும் என்று கூறிய அவர், இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்தினோம் என்று கூறினார்.