அதிமுக அலுவலகம்: உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ் தரப்பு

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது.  ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்…

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவித்துள்ளது. 

ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுக அலுவலகத்தின்  சாவியை உடனடியாக ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்க்கும் வகையில் தனது கட்சி தொண்டர்களை ஒரு மாத காலத்திற்கு அங்கு  அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்திய நீதிபதி, அலுவலகத்திற்கு தேவையான போதுமான பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் அளித்த பேட்டியில், “அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஓ உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு.  வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரத்தை நீதிமன்றம் எடுத்து கொண்டுள்ளது. மேல்முறையீடு செய்ய தகுந்த வழக்கு இது.” என்று தெரிவித்தார்.

மேலும், சுவாதீனம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து வாதிடப்படாமல் இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பித்தது ஏற்று கொள்ள முடியாது எனவும், உச்சநீதிமன்றதிற்கு மேல்முறையீடு செல்ல உள்ளதாகவும் அறிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.