கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மான முறையில் உயிரிழந்தார்.
அவர் பள்ளியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சரியாக படிக்காததால் ஆசிரியைகள் திட்டியதால் தற்கொலை செய்துகொள்வதாக ஸ்ரீமதி கடிதம் எழுதிவைத்துள்ளதாகக் கூறும் பள்ளி நிர்வாகம், கடிதத்தையும் வெளியிட்டுள்ளது.
எனினும், அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது மகளின் கையெழுத்து அல்ல என ஸ்ரீமதியின் தாய் செல்வி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனது மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ வரும் 27ம் தேதி கள்ளக்குறிச்சி வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.







