திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை – போலீசார் விசாரணை!

திண்டுக்கல் அருகே அதிமுக நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் அடுத்த மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டையை சேர்ந்த அதிமுக அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் துணைத் தலைவர் முத்தன் (எ) மருதமுத்து(42) செங்கல் சூளை நடத்தி வந்துள்ளார். இவர் வீடு மற்றும் கட்டிடங்கள் கட்டுமானத்திற்கு தேவையான செங்கல், மணல், ஜல்லி என கட்டுமான பொருட்கள் விற்பனை செய்பவராகவும் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை வெகு நேரமாகியும் முத்தன் வீட்டிற்கு வராத நிலையில் முத்தனின் உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் முத்தனின் தோட்டத்து வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு தலையில் வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக கொலை நடந்துள்ளதா? அல்லது பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கொலை நடந்துள்ளதா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.