அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்.  கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். 

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மின்சார துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி. தற்போது குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ந்தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய 3 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ. 2,37,34,458 கோடி பணம், 1.130 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்து உள்ளதாகவும், அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,16,37,300 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், செல்போன்கள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்குகள் மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்
தங்கமணி வீட்டில் தற்போது பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சோதனை, ஆய்வு நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இரண்டு துறை அதிகாரிகளை தங்கமணி வீட்டிற்கு அழைத்து வந்து அவரது வீட்டின் சொத்து மதிப்பீடுகள் ஆய்வு செய்வது வருகின்றனர்.

வீட்டில் நில அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தங்கமணி மீது பதியப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து அவரின் அசையா சொத்துக்களை அளக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை பதிவு செய்து அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு இரண்டு துறை அதிகாரிகளும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வு சட்டரீதியிலான நடவடிக்கை என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் தகவலாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.