தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில், தனியார் பள்ளிகளின் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதால் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி வருவதாகவும், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி தனியார் பள்ளிகளுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 669 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரக்கூடிய நிலை உள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, மாணவர்கள் மதிப்பெண் குறைவாக பெறுவது, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாதது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணங்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முழுவதும் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதிகபட்சமாக நீலகிரி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தலா 5 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, திண்டுக்கல் – 4, தேவகோட்டை – 4, லால்குடி – 2, வேலூர் – 2, திருவாரூர் – 2, நாட்றம்பள்ளி – 1, தட்டால கொளத்தூர் – 1, திருவள்ளூர் – 1, பர்கூர் – 1, தாராபுரம் – 1, புள்ளம்பாடி – 1, மயிலாடுதுறை – 1, ஆரணி – 1, கெலமங்கலம் – 1, தருமபுரி – 1, திருவண்ணாமலை – 1 உள்ளிட்ட அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களே இல்லாத சூழலில், 40 பள்ளிகள் மூடப்பட்டதாகவும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








