ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் 2,501 பேர் தென்னரசுவுக்கு ஆதரவு அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பையும் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முடிவுகளை எடுக்க அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில், வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் அனுப்பிய ஆவணங்களை தாக்கல் செய்த பின்பு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி.சண்முகம் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்துள்ளோம். தென்னரசுவுக்கு ஆதரவு கோரி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. 2,665 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,646 பேருக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 2,501 பேர் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மீதமுள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 145 பேரின் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
- பி. ஜேம்ஸ் லிசா








