பீகாரில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே தண்டவாளத்தை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் மதுபாணி மாவட்டத்தில் உள்ளது பாண்டால் ரயில் நிலையம். இந்த பாண்டால் ரயில் நிலையத்தையும் லோஹத் சர்க்கரை ஆலையையும் இணைக்கும் ரயில்வே தண்டவாளம் கடந்த சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதை கவனித்து வந்த மர்ம நபர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிலான ரயில் தண்டவாளத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து சமஸ்திபூர் ரயில்வே கோட்ட அலுவலர் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரில் தண்டவாளம் திருடப்படுவது வழக்கமானது தான். ஆனால் 2 கிலோமீட்டர் வரை தண்டவாளம் திருடப்படுவது இதுவே முதல் முறை என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.







