எம்ஜிஆர் உருவாக்கி ஜெயலலிதாவால் கட்டி காக்கப்பட்ட அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது என அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,
அ.தி.மு.க., வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாட்டில்,
மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 7575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்
விழா நடந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் அ.தி.மு.க., இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு, தலா 15 பேருக்கு மீன்பிடி வண்டிகள், டிபன் கடை வண்டிகள், காய்கறி விற்பனை செய்யும் வண்டிகள், தலா 100 பேருக்கு இட்லி
பாத்திரங்கள், அன்னக்கூடைகள், 75 பேருக்கு தையல் இயந்திரங்கள், 7,255 பேருக்கு
அரிசி மூட்டைகள் என மொத்தம் 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது..
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆர் இறந்த பிறகு இரண்டாக உடைந்த அதிமுகவை ஒன்றாக இணைத்தவர் ஜெயலலிதா. பீனிக்ஸ் பறவைபோல எழுந்து வந்து ஆட்சியமைத்தவர் ஜெயலலிதா.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். அவர்கள்
உருவாக்கிய இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது.
சாதாரண கிளைச் செயலாளர் முதல்வராக முடியும் என்றால் அது அதிமுகவில் தான். திமுகவில் நடக்காது. வீட்டுக்காக வாழ்ந்த குடும்பம் கருணாநிதியின் குடும்பம். குடும்ப வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
உங்களை போல சாதாரண நிலையில் தான் கட்சியில் இருந்தேன். அடித்தட்டு மக்களோடு
இணைந்து வாழ்ந்தவன். ஆனால், இப்போது இருக்கும் முதல்வருக்கு ஒன்றும் தெரியாது.
நிழலில் இருந்து முதல்வராக ஆகியிருக்கிறார். எனக்கு இடைக்கால பொதுச்செயலராக
அங்கீகாரம் கொடுத்துள்ளீர்கள். திமுகவில் ஆளே இல்லாதது போல உதயநிதி ஸ்டாலினை வளர்த்து கொண்டிருக்கிறார்.
திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. ஆனால், அதிமுக ஒரு ஜனநாயக கட்சி.
இரண்டு தலைவர்கள் மறைவுக்கு பின்னர் கட்சியை முடக்க எத்தனையோ அவதாரம்
எடுத்தனர். ஆனால், கட்சியை மீட்டி காட்டியிருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்து 22 மாத காலமாகியுள்ளது. இந்த ஆட்சியில் துன்பமும்,
வேதனையும் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது. மக்களுக்கு எந்த நல்ல திட்டத்தையும்
இவர்களால் கொடுக்க முடியவில்லை. எல்லா துறைகளிலும் கமிஷன், கரெப்ஷன்,
கலெக்ஷன் என்றே இருக்கிறது. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி
திமுகதான்.
520 அறிவிப்புகளில் எந்த ஒரு திட்டத்தையும் அவர் நிறைவேற்றவில்லை. 22 மாத காலத்தில் அவர்கள் செய்த சாதனை கலைஞருக்கு நூலகமும், எழுதாத பேனாவுக்கு
சிலை வைப்பதும்தான் இவரின் சாதனையாக இருக்கிறது. கலைஞருக்கு பேனா சின்னம்
வைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதை கடலில் தான் வைக்க வேண்டுமா? அரசாங்க பணத்தை எடுத்து குடும்பத்திற்காக செலவு செய்பவர்களுக்கு புகழ் சேர்ப்பதே வேலையாக இருக்கிறது.
2 கோடி ரூபாயில் பேனாவிற்கு சின்னத்தை வைத்து விட்டு 79 கோடி ரூபாய்க்கு
எழுதுகின்ற பேனாவை மாணவர்களுக்கு கொடுத்தால் கருணாநிதிக்கு மரியாதை சேரும்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
– யாழன்