அகமதாபாத் விமான விபத்து… 242 பேரில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய ஒரு பயணி – விபத்து குறித்து கூறியது என்ன?

அகமதாபாத் விமான விபத்தில் ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், விமான நிலையம் அருகேயே விபத்துக்குள்ளானது. 2 விமானிகள், 10 பணியாளர்கள் உட்பட 242 பேர் லண்டன் நோக்கி புறப்பட்டனர்.

இந்த விபத்தில் விமானத்தில் சென்ற 242 பேரும் பலியானதாக முதலில் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுவரை 204 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமேஷ் விஸ்வாஸ் குமார் (38) என்பவர் உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் உறுதிப்படுத்தினார். ரமேஷ் விஸ்வாஸ் குமார் இருக்கை எண் 11.Aல் பயணம் செய்தவர் என தகவல் வெளியாகி உள்ளது.

விபத்து குறித்து பேசிய விஸ்வாஸ் குமார்.,

“புறப்பட்ட முப்பது வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது. பிறகு என்ன ஆனது என தெரியவில்லை. கண் விழித்து பார்த்தால் என்னை சுற்றி உடல்கள் சிதறிக் கிடந்தன. நான் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டேன். யாரோ ஒருவர் என்னைப் பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடன் பயணித்த என் தம்பி அஜய் குமாரை காணவில்லை. 20 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.