”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா…

விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார். பின் மாணவர்களிடயே பேசிய அவர், “பள்ளிப்படிப்பை முடித்து விட்டாலும், கல்லூரி படிப்பை முடித்து விட்டாலும் கற்றுக் கொள்வதை நிறுத்தக்கூடாது. ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைய கொட்டிக் கிடக்கின்றது. ஒரு காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் 5, 6 கிலோமீட்டர் பயணம் செய்து பயில வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இன்று உங்களுக்கான வாய்ப்புகள் அதிகம். வாய்ப்புகளைப்போல போட்டிகளும் நிறைய உள்ளது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால் தான் தொழில்நுட்பத்தில் சாதிக்க முடிந்தது. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு, அவர்களுக்கான உயரம், பணி காத்துக்கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கவில்லை என்று ஏங்க வேண்டாம். மனிதர்களாக நாம் பிறந்ததே மிகப்பெரிய வாய்ப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று பேசினார்.


நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, ”இந்தியா, விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. வாழ்நாள் முழுவதும் கற்றல் என்பது முக்கியமான ஒன்று. கற்றலின் பரிணாமத்தை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் நம் குழந்தைகள் சாதிப்பதற்கு தேவையான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் ஆரம்ப கட்ட பணி நடைபெற்று வருகின்றது. கொரோனா, மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தியது. ஆனால் அதைத் தாண்டி
வந்துள்ளோம் என்றால் தொழில்நுட்ப வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் தான் காரணம். விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே
விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை. அப்போது தான் புதிய தொழில் நுட்பங்களை கையாள முடியும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.