அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள ரயில்களுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி வருகின்றனர்.
இந்திய ஆயுதப்படையைப் பலப்படுத்துவதன் ஒரு பகுதியாக, முப்படைகளில் இளம் வீரர்களை அதிகளவில் சேர்ப்பதற்கான புதிய ‘அக்னிபாத்’ ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவம், விமானப்படை, கடற்படையில் சேரும் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருப்பார்கள்.
4 ஆண்டுக் கால சேவை முடிந்த பின் அக்னி வீரர்களில் 25% பேர் ராணுவத்தில் நிரந்தரமாக 15 ஆண்டு ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 75% பேர் ஓய்வூதியம் இல்லாமல் பணியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்படுவார்கள். இத்திட்டத்தில் 4 ஆண்டுக் கால குறுகிய சேவை நிறைவு செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், அரசின் புதிய திட்டமான அக்னிபாத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பீகார் மாநிலத்தில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கிசராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விக்ரம்ஷிலா விரைவுவண்டியின் மூன்று பெட்டிகளை எரித்துள்ளனர்.
https://twitter.com/ANI/status/1537651081437536256
அண்மைச் செய்தி: ‘ஆன்லைன் வங்கி மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள 7 டிப்ஸ்’
அதேபோல, டெல்லி-கொல்கத்தா பிரதான ரயில் பாதையில் போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டதால் பல ரயில்கள் தாமதமாகச் சென்றன. மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக அதிகாலை 5 மணி முதல் மாணவர்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/AmitShah/status/1537656053823057920?t=Lhg0T3ynwypCdjhf8TOmvQ&s=08
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்துள்ளார். நாட்டுக்கு சேவையாற்றவும், இளைஞர்களின் எதிர்கால நலனுக்காகவும் மகத்தான திட்டத்தை கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். ராணுவத்தில் பணி நியமனங்கள், கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில், அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்களின் வயது வரம்பை 21ல் இருந்து 23 ஆக உயர்த்தி இருப்பது மிகப்பெரிய நடவடிக்கை என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா வரவேற்றுள்ளார்.








