வயதானவர்கள் கடிதம் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதி நிலை பட்ஜெட் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து 14ம் தேதி சட்டசபை வரலாற்றில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், பனை தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் 3வது நாள் அமர்வு நேற்று நடைபெற்றது. இதில், திண்டிவனம் ராமமூர்த்தி, அய்யாறு வாண்டையார் உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 9 பேருக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. மேலும், ஸ்டேன் சுவாமி, வே.ஆனைமுத்து, ஆதீனம், மருத்துவர் காமேஸ்வரன், தமிழறிஞர் இளங்குமரனார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ், வயதானவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் உள்ளது என தெரிவித்தார். அதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. கடிதம் மூலம் மாற்று நபர்கள் மூலம் பொருட்கள் வாங்கலாம். ஆனால், ரேஷன் கடை ஊழியர்களிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் என தெரிவித்தார்.







