டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் – மெட்டா நிறுவனம் அறிவிப்பு

டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என  மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார். ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் மற்றும்…

டிவிட்டரை அடுத்து ஃபேஸ்புக்கிற்கும் புளூடிக்கிற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என  மெட்டா நிறுவனத்தின் சிஇஓ வான மார்க் ஜுக்கர்பர்க் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தங்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்குகளுக்கு உரிய ஆவணங்களை செலுத்தி அதன் பயனாளர்கள்  ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர்.

ஒருவருவருடைய  அதிகாரப்பூர்வ  கணக்கு இதுதான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, பெயருக்கு அருகில் புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சில மாதங்களுக்கு முன்பு உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் டிவிட்டரை விலைக்கு வாங்கினார்.  இதனையடுத்து அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக டிவிட்டர் பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டிவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து டிவிட்டர் நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், எலான் மஸ்க் டிவிட்டரில், டிவிட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் டிவிட்டர் பயனர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையும் படியுங்கள் : மார்வெலில் வெளியான மற்றொரு மோசமான படம் ஆன்ட் மேன் 3? – பாக்ஸ் ஆபிஸில் படுமோசமான வசூல்!

இந்த நிலையில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பர்க் புளுடிக் கட்டணம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..

“இந்த வாரம் நாங்கள்  மெட்டா வெரிஃபைட் தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளோம்.  அரசின் ஆவணங்கள்  மூலம் உங்கள் கணக்கைச் சரிபார்க்கவும், நீல நிற பேட்ஜைப் பெறவும், உங்கள் சமூக வலைதள கணக்குகளுக்கு கூடுதல்  பாதுகாப்பைப் பெறவும் சந்தா சேவையை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த புதிய அம்சம் தொடர்பான எங்களின்  சேவைகள் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும். மெட்டா ஃவெரிபைடு தொடர்பாக சாதரன இணைய தளத்திற்கு மாதம் 992 ரூபாயும் (11.99 அமெரிக்க டாலர் ),  iOS எனப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் தளத்திற்கு மாதம் 1240 ரூபாயும் (14.99 அமெரிக்க டாலர்) வசூலிக்கபடும்.  இந்த வாரத்தில்  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மட்டும் இந்த சேவையை அறிமுகப்படுத்துகிறோம். விரைவில் பல நாடுகளில் அறிமுகப்படுத்த உள்ளோம்” என மெட்டா நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.