திருச்செந்தூரரில் கல்லூரியில் பயில்வதற்காக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடிய பழங்குடியின மாணவன் பூவலிங்கத்திற்கு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு நள்ளிரவில் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அம்மன்புரம் பகுதியில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சின்னத்துரை – சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் பூவலிங்கம் மற்றும் மகள் முத்துசெல்வியின் படிப்பிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிச்சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் 12-ம் வகுப்பு பயின்று வந்த மாணவன் பூவலிங்கம் நடந்துமுடிந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 85% மதிப்பெண்கள் பெற்று உயர் கல்வி பயில சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தார். பலமுறை மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் முகாமில் சாதிச்சான்றிதழ் கேட்டு மனு அளித்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்
செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் மாணவன் பூவலிங்கத்திற்கு பழங்குடியின
சாதிச்சான்று வழங்கப்பட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்து கோட்டாட்சியர் புஹாரி நிராகரிப்பு செய்துள்ளர். இதனைத்தொடர்ந்து பழங்குடியின மாணவன் பூவலிங்கத்தின் உயர்கல்விக்காக அவரது உறவினர்களும் , கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையில் மாணவன் பூவலிங்கத்திற்கு சாதி சான்றிதழ் தர கோவில்பட்டி கோட்டாட்சியர் கொடிவழி சான்று வழங்கிய போதும் அதனை திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி ஏற்க மறுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் கடந்த 4 நாட்களாக விசாரணைக்காக வரவழைத்து காலை முதல் இரவு வரை காத்திருக்க செய்து அலைக்கழித்தாக கூறப்பட்டது.
மேலும் மாணவன் பூவலிங்கம் சட்டக்கல்லூரி பயில ஆசைப்பட்டுள்ள நிலையில்
சட்டகல்லூரியில் விண்ணப்பம் செய்ய இறுதி நாட்களை எட்டியதால் உடனடியாக
சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி உறவினர்கள் மற்றும் விசிகவினர் காலை முதல் இரவு வரை தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைத்தொடர்ந்து நள்ளிரவு 1- மணி அளவில் மாணவன் பூவலிங்கம் மற்றும் அவரது தங்கை முத்துசெல்விக்கு சாதிச்சான்று
வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
நீண்ட போராட்டங்களுக்கு பிறகு சாதிச்சான்றிதழ் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தவர்கள்; இதுபோல அனைத்து பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிய
சாதிச்சான்றிதழ் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை
விடுத்தனர். மேலும் திருச்செந்தூர் கோட்டாட்சியர் புஹாரி தங்களுக்கு சாதித்சான்றிதழ் தர மறுத்து வேண்டுமென்றே அலைக்கழித்ததாகவும் வேதனையுடன்
குற்றம்சாட்டினர்.
வீரம்மாதேவி








