அசெம்பளி முடிவடைந்தவுடன் அதிகாரிகள்  டிரான்ஸ்பர் ?

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 13ஆம் தேதியன்று பல்வேறுத்துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் வெளியாகக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த…

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் மே 13ஆம் தேதியன்று பல்வேறுத்துறை செயலாளர்கள் பணியிட மாற்றம் வெளியாகக்கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக ஸ்டாலின் பதவியேற்று மே மாதத்துடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகள் அதே துறையில் தொடர்வர் என்றும், அரசின் அதிருப்தியில் சிக்கியுள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக வேறுத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுத்தொடர்பாக கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, ஒவ்வொருத்துறையிலும் அதிகாரிகள் பல்வேறு நற்பெயருடன் உள்ளனர். இருப்பினும் ஒரேத்துறையில் ஒரே அதிகாரி தொடர்வதை விட அவர்களது திறமையை வேறுத்துறைகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த டிரான்ஸ்பர் அமையக் கூடும் எனக் கூறுகின்றனர்.

அந்த வகையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் மே மாதம் 10ம் தேதி முடிவடைகிறது. அதனைத்தொடர்ந்து 13ஆம் தேதி வாக்கில் மின்துறை செயலர், நகராட்சித்துறை செயலர், மீன்வளத்துறை செயலர், தொழிற்துறை செயலர், ஐடித்துறை செயலர்,  மற்றும் பல்வேறு துறைகளில் மேலாண் இயக்குநர்களாக உள்ள அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்ய வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணியினை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஒவ்வொரு துறையிலும் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் அரசின் செயல்பாட்டிற்கு எவ்வாறு உறுதுணையாக இருந்தன என்பது குறித்து மூத்த அமைச்சர்கள் சிலரிடம் முதல்வர் கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த டிரான்ஸ்பரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களின் டிரான்ஸ்பர் பட்டியலும் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது. மாவட்ட ஆட்சியர் தேர்வை பொருத்தவரை சர்ச்சையில் சிக்காமல் இருக்கும் ஆட்சியர்கள் அதே பணியைத் தொடர்வர் என கோட்டை வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதேபோல் சிறப்பாக செயல்படும் இளம் அதிகாரிகளை கண்டறிந்து அவர்களை முக்கிய பதவிகளில் நியமிக்க முதல்வர் முக ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

திமுக அரசு ஒரு மாற்றத்திற்கான அரசு என்ற எண்ணம் மக்கள் மனதில் இடம்பெறும் வகையில் இந்த டிரான்ஸ்பர்கள் அமையக்கூடும் எனவும், அதேபோல் மத்திய பணிக்கு சென்று சிறப்பாக செயல்படும் தமிழக அதிகாரிகளையும் மீண்டும் மாநிலப்பணிக்கு அழைப்பது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாகவும் தெரிகிறது.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.