காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் கூறிய புகார் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் கடந்த 24 ம் தேதி தேசிய ஊரக தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என பெண் ஒருவர் ஆவேசமாக முறையிட்டார். இதனைக் கேட்ட முதலமைச்சரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன், வட்டாட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் தரமில்லாத அரிசிகள் வழங்கப்பட்டது தெரியவந்தது.
எனவே நியாய விலை கடைகளில் உள்ள தரமற்ற அரசிகளை உடனடியாக திரும்ப பெற நடிவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி தற்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் தரமில்லாத அரிசிகள் திரும்ப அனுப்பபட்டு வருகிறது.
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள நியாய விலைக் கடையில் 1460 அட்டைதாரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கடந்த மாதம் புழுங்கல் அரிசி, பச்சரிசி உள்பட 140 அரிசி மூட்டைகள் இறக்கப்பட்டு அதில் 80 மூட்டை அரிசிகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்டது. தரமற்ற அரசிகளை திரும்ப பெற உத்திரவிடபட்டு உள்ளதால் தற்போது 60 அரிசி மூட்டைகள் திரும்பபெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








