கருமேகங்கள் கலைகின்றன திரைப்படத்தின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு கவிஞர் வைரமுத்து – சித்ரா -தங்கர்பச்சான் காம்போ இணைந்துள்ளது.
தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சிறுகதை ஒன்றை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி ஜனவரி 14ம் தேதி நிறைவடைந்தது.
இதனையும் படியுங்கள்: டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு
கடந்த 6ம் தேதி ‘கருமேகங்கள் கலைகின்றன’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் , இயக்குநர் பாரதிராஜா மற்றும் இப்படத்தை இயக்கிய தங்கர் பச்சான் ஆகியோர் வெளியிட்டனர்.
கருமேகங்கள் கலைகின்றன படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில், கவிபேரரசு வைரமுத்து எழுதிய பாடல் பதிவு நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகிகளின் வரிசையில் பிரபலமானவராக அறியப்படும் சித்ரா இப்பாடலை பாடியுள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்ததாவது..
”திரைப்பட பின்னணிப் பாடகி சித்ரா பாடிய முதல்பாட்டு 39 ஆண்டுகளுக்கு முன் வைரமுத்து எழுதிய பூஜைக்கேத்த பூவிது ஆகும். அந்த பாடலை பாடிய அதே பாடகி சித்ராவை நான் தற்போது தங்கர்பச்சானின் படத்தில் இடம் பெறும் பாடல் பதிவில் சந்தித்தேன். அதே குரல்.. அதே கனிவு.. அதே பணிவு.. அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தங்கர்பச்சான் ” என வைரமுத்து பாராட்டினார்.
மேலும் இது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் குறிப்பிடும் போது..
எனது இயக்கத்தில் வளரும் வரும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்திலும் மூவருமே இணைந்து பணியாற்றுகின்றோம்! தொடர்ந்து திரைக்கலையுலகில் மூவருமே பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது!” என தெரிவித்தார்.
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் எனவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







