திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு, இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1 கோடி உறுப்பினர்களைக் கொண்ட திமுகவில் புதிதாக மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியை ஏப்ரல் 3 ஆம் தேதி தொடங்கி ஜூன் 3ஆம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. துண்டறிக்கைகள் மூலமாகவும், திண்ணைப் பிரச்சாரங்கள் மூலமாகவும், முக்கிய இடங்களில் முகாம்கள் அமைப்பது மூலமாகவும், வீடு தோறும் தேடிச்சென்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்திட முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படியுங்கள் : டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு
திருவாரூரில் ஜூன் 3 ஆம் தேதி திமுக தலைமைக் கழகத்தால் நூற்றாண்டு தொடக்க விழா மாநாடு நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் வளாகம், அருங்காட்சியகம், திருமண மண்டபம் ஆகியவற்றை அகில இந்திய தலைவர்கள் திறந்து வைக்க உள்ளனர். அன்று மாலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்களும் உரையாற்றுகின்றனர். இது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பார்வையாளர்களாக அணிகளின் நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப்படவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.