நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்த திமுக!

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஆளும் பாஜக 301 உறுப்பினர்கள் , மாநிலங்களவையில் 95 உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 53 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 29 என இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.…

இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஆளும் பாஜக 301 உறுப்பினர்கள் , மாநிலங்களவையில் 95 உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 53 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 29 என இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.

திராவிட முன்னேற்ற கழகம் 24 மக்களவை உறுப்பினர்களுடன் மக்களவையின் 3 வது பெரிய கட்சியாக உள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இன்று திமுகவைச் சேர்ந்த கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் கிரிராஜன் ஆகிய மூன்று பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 10 ஆக உள்ளது. அத்துடன் மாநிலங்களவையில் 4 வது பெரிய கட்சியாகவும் திமுக இருக்கிறது. என்ன தான் எதிர்க்கட்சி வரிசையில் திமுக இருந்தாலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சேர்த்து 34 உறுப்பினர்கள் உள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டில் திமுக ஆளும் கட்சியாக உள்ளது. பல்வேறு கூட்டணி ஆட்சிகளில் பங்கு கொண்டுள்ள அனுபவமும் திமுகவுக்கு இருக்கிறது. எனவே வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களிலும், அடுத்து வரும் முக்கிய நிகழ்வுகளிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலைநகர் டெல்லியிலும் இனி திமுகவை புறக்கணித்து யாரும் அரசியல் செய்ய முடியாது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதே போல் தமிழ்நாட்டிலுள்ள மொத்த மக்களவை தொகுதிகள் 39 உறுப்பினர்களில் திமுக 24, காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தை 1, அதிமுக 1 ஆக உள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 18 ல் , திமுக 10 உறுப்பினர்களையும், அதிமுக 4 உறுப்பினர்களையும், இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் மதிமுக தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது

12 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் திமுக பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் உரிமைக்குரல் எழுப்பி, தமிழ்நாட்டிற்கு வளம் சேர்க்கவும் உதவும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.